Monday, October 12, 2009

தினம் தினம் தீபாவளி - சிறுக‌தைச் சித‌ற‌ல்

மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.

தெருவெங்கும் காகிதக்குப்பைகள் ... சென்னை நகரம் முழுவதுமே புகை மண்டலமாய்க் காட்சியளித்தது ... அணுகுண்டின் ( ஆடம் பாம் ) ஓசை செவிகளைக் கிழித்துக்கொண்டு மனதுக்குள் இறங்கிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த சரவெடிகளின் சத்தம், அந்த வழியாக கடந்து செல்பவர்களின் குலையையே நடுங்கச் செய்துகொண்டிருந்தது. அங்கிருந்தவர்களுக்கு, தான் ஏதோ இந்திய நாட்டின் எல்லையில் இருக்கிறோமோ என்பது போல் ஒரு உணர்வு. அந்த அளவுக்கு, தெருவே வெடிச் சத்தத்தில் அலறிக்கொண்டிருந்தது. ஆனால் அந்த வானம் மட்டும், பட்டுக் கம்பளம் போர்த்தப்பட்டதுபோல், பூ மத்தாப்புகள் சிதற சிரித்துக்கொண்டிருந்தது ... வெடியின் திரியைப் பற்ற வைத்தவுடன் உடனே வெடிக்காமல், சற்று உயரச் சென்று வானத்தைப் அழகுபடுத்துவதுபோல் அங்கேயே பல வண்ணங்களுடன் வெடித்துச் சிதறும் வகையிலான வெடிகள் இந்த வருடம் அதிகம் வந்திறங்கியிருந்தது.

அந்தத் தெருவிலேயே சற்று வசதி படைத்தவன் மகேஷ். மகேஷின் அப்பா ராமலிங்கம் ஒரு பெரிய தொழிலதிபர். சிறு வயது முதலே, சகல வசதிகளுடன் வாழ்வை அனுபவித்துக் கொண்டிருப்பவன் மகேஷ். ஒரே பிள்ளை என்பதால், வீட்டில் இவனை தங்கத் தட்டில் வைத்துத் தாங்கிக் கொண்டிருந்தனர் மகேஷின் பெற்றோர். மகேஷ் இப்போது சென்னையிலுள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை. சென்னை.

" அம்மா ... ரொம்ப வலிக்குதே ... அம்மா ... அம்மா ... என்னால முடியலங்க ... ரொம்ப வலிக்குதுங்க ... " - பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த செல்வியின் கதறல் அந்த வீட்டையே கலங்கடித்துக்கொண்டிருந்தது.

" கொஞ்சம் பொறுத்துக்கோம்மா ... கணேஷ் ஆட்டோவ கூட்டிட்டு வர போயிருக்கான் ... இப்ப வந்துடுவான் ... கொஞ்சம் வலிய தாங்கிக்கோம்மா ... " - செல்வியை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தாள் அவளின் மாமியார்.

" ரொம்ப வலிக்குதும்மா ... என்னால தாங்கவே முடியலம்மா ... ".

செல்விக்கு, இது முதல் பிரசவம் என்பதால், பயம் கலந்த கண்களுடன் வலியில் வாடிக்கொண்டிருந்தாள்.

மூச்சிரைக்க ஆட்டோ நிறுத்தத்திற்கு ஓடி வந்த கணேஷுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தீபாவளி என்பதால் ஆட்டோ எங்குமே இல்லாததைப் பார்த்த கணேஷின் மனம் பதறியது. என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்துப்போய் நின்றான். அப்போதுதான் தூரத்தில் ஒரு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. ஏற்கனவே அந்த ஆட்டோ சவாரியுடன் வந்து கொண்டிருப்பதை ஓரளவு அருகில் வந்தவுடன்தான் கணேஷால் உணர முடிந்தது. வேறு வழியே தெரியாமல் இறைவனை வேண்டிக்கொண்டு நடுரோட்டில் அந்த ஆட்டோவை நோக்கிப் பாய்ந்து அதை வழிமறித்தான்.

" சார் ... என்னோட மனைவி பிரசவ வலியில துடிக்குறா சார் ... கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க சார் ... எங்கயுமே ஆட்டோ இல்ல சார் ... நீங்கதான் சார் உதவி பண்ணனும் ... " - என்று அந்த ஆட்டோ ட்ரைவரிடமும், சவாரியாக வந்திருந்த இருவரிடமும், கால்களில் விழாத குறையாக கெஞ்சினான் கணேஷ்.

அவர்கள் ஆட்டோவை விட்டு இறங்க, கணேஷ் ஆட்டோவில் ஏறி வீட்டை நோக்கி விரைந்தான். ஆட்டோ வீட்டின் முன் சென்று நின்றது.

" அம்மா ... நான் இவள ராஜு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன் ... நீங்களும் அப்பாவும் அப்பறமா வாங்க ... " - என்று சொல்லியவாறே செல்வியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி மடியில் படுக்க வைத்துக்கொண்டான் கணேஷ்.

" சார் ... ராஜு ஹாஸ்பிடல் போகணும் ... கொஞ்சம் சீக்கிரமா போங்க சார் ... " - என்றான் ஆட்டோ ட்ரைவரிடம் கணேஷ்.

ஆட்டோ சீறிப் பாய்ந்துகொண்டிருந்தது ... சிறிது தூரம் சென்றவுடன் பிரதான சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், ஆட்டோ மேற்கொண்டு செல்ல முடியாமல் அந்தக் கூட்டத்திலேயே அகப்பட்டுக் கொண்டுவிட்டது.

" இதோ வந்துடுச்சும்மா ... கொஞ்சம் பொறுத்துக்கோ ... " - என்று செல்வியை தேற்றிக் கொண்டிருந்தான் கணேஷ்.

" கடவுளே ... இந்த நேரத்துலதானா இப்படி ஃட்ராபிக் ஜாம் ஆகணும் ... " - என்று பல்லைக் கடித்தபடியே மனதுக்குள் கடவுளைத் திட்டிக்கொண்டிருந்தான் கணேஷ்.

மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.

வீட்டில் அழைப்பு மணி ஒலித்தது ... எழுந்து போய் கதவைத் திறந்தான் மகேஷ் ...

" ஹாய் மகேஷ் ... தீவாளி விஷஸ் டு யு டா ... ஹவ் ஆர் யு மகேஷ் ... எப்படி போய்ட்டிருக்கு தீபாவளில்லாம் ... " - மகேஷின் நண்பன் சுரேஷ்.

" ஹாய் சுரேஷ் ... ஐ அம் ஃபைன் டா ... தீபாவளி நல்லா போய்ட்டிருக்கு ... வாட் எ சர்ப்ரைஸ் டா ... நீ எப்படி இருக்க ... " - மகேஷ்.

" ஐ அம் டூயிங் குட் டா ... உன்ன பாத்து ரொம்ப நாளாச்சு ... அதானலத்தண்டா சும்மா பாக்கலான்னு வந்தேன் ... " - சுரேஷ்.

வீட்டில் செய்த இனிப்புகளை ஒரு தட்டில் வைத்து மகேஷின் தாய் எடுத்து வந்து கொடுத்தாள்.

" எப்படிம்மா இருக்கீங்க ... இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்மா ... " - என்றான் சுரேஷ்.

" நான் நல்லாயிருக்கேம்பா ... நீ எப்படி இருக்க ... உன்ன பாத்து எவ்வளவு நாளாச்சுப்பா ... வீட்டுல அம்மா அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க ... " - என்றாள் மகேஷின் தாய்.

" நான் நல்லாயிருக்கேம்மா ... வீட்லயும் அம்மா அப்பா எல்லாரும் நல்லா இருக்காங்க .. " - சுரேஷ்.

மகேஷும் சுரேஷும் பள்ளி நண்பர்கள். பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தார்கள். மகேஷுக்கு மிகவும் நெருங்கிய நண்பன் என்றால், அது சுரேஷ்தான். சுரேஷ் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும், இவர்கள் இருவருக்குள்ளும் எந்த ஒரு சமயத்திலும், எந்த ஒரு விஷயத்திலும், ஏழை பணக்காரன் என்ற ஒரு வேறுபாடு இருந்ததே இல்லை. அந்தப் பள்ளியே இவர்களின் இணை பிரியா நட்பைப் பார்த்து வியந்து நின்றது. அப்படி இருந்த இவர்களது நட்பு, கல்லூரியிலும் தொடர முடியாமல் போனதற்கு, சுரேஷின் குடும்ப வறுமையே காரணம். மகேஷ் வசதி படைத்தவன்தான் என்றாலும் கூட, அவன் +2 தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் ஒரு நல்ல கல்லூரியில் சேர அவனுக்கு கை கொடுப்பதாக இல்லை. ஆனால் சுரேஷ், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கூட, அவனுடைய ஏழ்மை, அவன் ஒரு நல்ல கல்லூரியில் சேர முட்டுக்கட்டையாக இருந்தது. மகேஷின் அப்பா சுரேஷுக்கு பணம் கொடுத்து உதவத் தயாராக இருந்தபோதும் கூட, சுரேஷும் அவனது குடும்பம்பத்தாரும் அதனை ஏற்க மனமில்லாமல் போக, அரசுக்கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான் சுரேஷ். அப்போது பிரிந்த இருவரும் மீண்டும் சந்திக்க இன்றுதான் காலநேரம் இடம் கொடுத்திருக்கிறது.

தியாகராய சாலை, தியாகராய நகர். சென்னை.

" எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க ... என்னால தாங்கவே முடியலங்க ... அம்மா ... அம்மா ... " - செல்வி.

" பயப்படாதம்மா ... நான் இருக்கேன்ல ... ஒன்னும் ஆகாது ... கவலப்படாத ... " என்று கணேஷ் செல்வியை தேற்றிக் கொண்டிருக்கும்போதே அவனையும் அறியாமல் அவன் கண்களிலிருந்து நீர்த்துளி கசிந்துகொண்டிருந்தது.

டாக்டர் பிரசவத்திற்கு குறித்துக் கொடுத்த நாளுக்கு இன்னும் சுமாராக இருபது நாட்கள் இருந்தாலும், செல்விக்கு முன்னதாகவே திடீரென வலி வந்துவிட்டது. செல்வி பிரசவ வலியில் துடிப்பதைப் பார்த்து கணேஷால் சகித்துக்கொள்ளமுடியவில்லை. மனதுக்குள் ஏதேதோ நினைத்துக்கொண்டு புலம்பியவாறே ட்ரைவரை விரட்டினான் கணேஷ்.

" ட்ரைவர் ... வண்டிய கொஞ்சம் வேகமா ஓட்டுங்க ..." என்று உரத்த குரலில் கத்தினான் கணேஷ்.

அந்த ஓட்டுனர் மட்டும் என்ன செய்வார் பாவம். கணேஷின் நிலையை நன்கு உணர்ந்திருந்தவர், " சார் ... நான் பாத்து வேகமாதான் போயிட்டிருக்கேன் ... சாயங்கால நேரங்குறதால, எங்க பாத்தாலும் ஒரே கூட்டமா இருக்கு சார் ... மெயின் ரோடு வேற ... பக்கத்துல இருக்குற ஏதாவது தெரு வழியா போனா, கூட்டம் கொஞ்சம் கம்மியா இருக்கும் சார் ... சீக்கிரம் போயிடலாம் ... கவலப்படாதீங்க ... " என்றார் மெலிந்த குரலில்.

மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.

" சுரேஷ் ... இந்தாடா, இத புடி ... இந்த வருஷம் பத்தாயிரம் ரூவாய்க்கு பட்டாசு வெடில்லாம் வாங்கிருக்கோம் ... இன்னிக்கு பூரா ஆச தீர எல்லாத்தையும் வெடிச்சுடனும் ... வா, போய் வெடிக்கலாம் ... " என்றபடியே ஒரு பெரிய பையினை சுரேஷின் கையில் திணித்தான் மகேஷ்.

இவ்வளவு பட்டாசுகளை தன் வாழ்நாளிலேயே பார்த்திராத சுரேஷ், ஆச்சர்யத்தில் வாய்பிளக்க நின்றான்.

" இல்ல மகேஷ் ... நீ போய் வெடி ... நான் வேண்ணா கூட இருந்து பாக்குறேன் ... "

" காலேல ஆரமிச்சு, நீ வீட்டுக்கு வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் நான் வெடி வெடிச்சுட்டுதாண்டா இருந்தேன் ... மத்யானம் சாப்டதத் தவிர இன்னிக்கு பூரா நான் பண்ண வேல அது ஒண்ணுதான் ... " என்று சொல்லிக்கொண்டே வலுக்கட்டாயமாக சுரேஷை வீட்டின் முற்றத்திற்கு இழுத்து வந்தான் மகேஷ்.

வீட்டில் ஒரே பையன் என்றதால், மகேஷ் தன் சிறுவயதில் விரும்பிக்கேட்ட கடலைமிட்டாய் முதல், இன்று அவன் படித்துக் கொண்டிருக்கும் கல்லூரி வரை, அவன் கேட்ட எதனையும் மறுக்காமல் கொடுத்த மகேஷின் அப்பா, இந்த தீபாவளிக்கு அவனுக்காக வாங்கிக்கொடுத்திருப்பது பதினைந்தாயிரம் ருபாய் மதிப்புள்ள துணிமணிகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய்க்கு பட்டாசு வெடிகள்.

மகேஷும் சுரேஷும், வீட்டின் முற்றத்தில் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர். இருவரும் சரவெடி மற்றும் அணுகுண்டுகளை வெடித்து மகிழ்ந்தனர். அறிவியல் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களைப் போல் இவர்களும் விண்ணில் ஏவுகணைகளைப் ( ராக்கெட் ) பறக்க விட்டுக்கொண்டிருந்தனர்.

தணிகாசலம் சாலை, தியாகராய நகர். சென்னை.

ஆட்டோ தியாகராய சாலையிலிருந்து தணிகாசலம் சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது.

" ஆஸ்பத்திரிக்கு இன்னும் அஞ்சு நிமிஷத்துல போயிடலாம் சார் ... " என்று கணேஷையும் செல்வியையும் தேற்றிக்கொண்டிருந்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.

கணேஷுக்கு அவர் சொன்ன வார்த்தைகள் எதுவுமே மனதுக்குள் இறங்கவில்லை.

கிட்டத்தட்ட ஒரு நடைபிணம் போலவே அந்த ஆட்டோவுக்குள் சென்று கொண்டிருந்தான்.

ஆட்டோ தணிகாசலம் சாலையிலிருந்து, மயிலை ரங்கநாதன் தெருவை நோக்கித் திரும்பியது. அந்தத் தெருவே ஒரே புகை மயமாய் இருந்தது.

மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.

அப்போது மகேஷ் சற்றும் எதிர்பாராத வகையில், ராக்கெட் வைக்கப்பட்டிருந்த பாட்டில் கீழே விழ, அதிலிருந்த ராக்கெட் அந்த வழியாக வந்துகொண்டிருந்த ஒரு ஆட்டோவின் உள்ளே சரசரவெனப் பாய்ந்தது. திடீரென ஆட்டோவுக்குள் வந்த ராக்கெட்டால் நிலைதடுமாறிய ஓட்டுனர் எவ்வளவோ முயற்சி செய்தும், தன் கட்டுப்பாட்டினை இழக்க, அந்த ஆட்டோ கவிழ்ந்தது. தெருவெங்கும் இரத்த வெள்ளம். அந்த ஆட்டோவில் இருந்த மூவரும் மயங்கிக் கிடந்தனர். சத்தம் கேட்டுப் பதறியடித்து வெளியே வந்த ராமலிங்கம், இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார். உடனே, ரத்தத்தில் உறைந்திருந்த மூவரையும் தனது காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அப்போலோ மருத்துவமனை, சென்னை.

மிகுந்த பதட்டத்துடன் மகேஷின் குடும்பத்தினர் மருத்துவமனையின் மேசையில் அமர்ந்திருந்தனர். மிகவும் கஷ்டப்பட்டு, கணேஷின் வீட்டைக் கண்டுபிடித்து அவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, கணேஷின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்து வந்து கொண்டிருந்தனர்.

செல்விக்கு சிகிச்சையளித்துக்கொண்டிருந்த அறையிலிருந்து டாக்டர் ஒருவர் வெளியே வந்தார்.

" டாக்டர் ... " - பதட்டத்துடன் ராமலிங்கம்.

" அவங்களுக்கு ஆண் கொழந்த பொறந்திருக்கு ... "

" அந்த அம்மாவுக்கு ஒன்னும் ... " என்று தயங்கியபடியே இழுத்தார் ராமலிங்கம்.

" யாரோட உயிருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்ல ... இரத்தம் ரொம்ப வெளியேறியிருக்குறதால மயக்கம் தெளிய இன்னும் கொஞ்ச நேரமாகும் ... "

இந்த வார்த்தைகளைக் கேட்ட பின்புதான் ராமலிங்கத்திற்கு உயிரே வந்தது.

" உங்கள சீஃப் டாக்டர் பாக்கனும்னு சொன்னார் ... " என்று சொல்லிவிட்டு கணேஷ் இருந்த அறைக்கு விரைந்தார் அந்த டாக்டர்.

பேராபத்திலிருந்து காப்பாற்றியதற்காக நன்றி கலந்த அன்புடன், தன் பாலிய சிநேகிதராகிய சீஃப் டாக்டரைக் காண மெதுவாகக் கதவைத் தட்டியபடி அறைக்குள் நுழைந்தார் ராமலிங்கம்.

" வாடா ... உக்காரு ... " என்றார் சீஃப் டாக்டர்.

" நீ பாக்கனும்னு சொன்னேன்னு டாக்டர் சொன்னாங்க ... " என்றான் ராமலிங்கம்.

" ஆமாண்டா ... இன்னும் கொஞ்சம் தாமதமாயிருந்தாக்கூட இவங்கள காப்பாத்தியிருக்குறது ரொம்ப கஷ்டமாகியிருந்திருக்கும். சரியான நேரத்துல கூட்டிட்டு வந்ததாலதான் எங்களால காப்பாத்த முடிஞ்சுது ... அந்த ட்ரைவரோட நிலைமைதான் கொஞ்சம் மோசமாயிருக்கு ... உடல் முழுக்க தீக்காயங்கள் நிறையா இடத்துல பட்டிருக்கு ... "

" உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையே ... காப்பாத்திட முடியும்ல ... " என்று நடுங்கியபடியே கேட்டார் ராமலிங்கம்.

" காப்பாத்திடலாம் ... ஆனா மறுபடியும் பழைய நிலமைக்கு வர்றதுக்கு கொஞ்ச நாளாகும் ... இது தவிர உன் கிட்ட இன்னொரு விஷயம் பேசணும் ... இது நான் எனக்குள்ள ரொம்ப நாளா யோசிச்சிட்டிருந்த ஒரு விஷயம் ... "

" எதுன்னாலும் தயங்காம சொல்லுடா ... "

" வருஷா வருஷம் தீபாவளி அப்படிங்குறது எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான நாளாத்தான் இருக்கும் ... ஆனா அந்த சந்தோஷமான நாள்ள கூட பல ஆயிரம் பேர் பட்டாசுகலால தீக்காயங்கள் பட்டு சிகிச்சைக்கு வர்றாங்க ... அப்படி வர்றவங்கள்ல சில பேர் உயிருக்காகப் போராடி இறந்தும் போயிடுறாங்க ... இன்னும் சில பேர் வெடிச்சத்தத்தால அதிர்ச்சிக்குள்ளாகி தன்னோட உயிரையே விட்டுடறாங்க ... உண்மைய சொல்லனும்னா நம்மளோட குடும்பத்துல யாராவது நேரடியா பாதிக்கப்படுற வரைக்கும் இதப்பத்தி எல்லாம் நம்ம யாரும் கவலப்படுறதில்ல ... பல ஆயிரங்கள் குடுத்து நம்ம வாங்கி வெடிக்கிற வெடிகள் சில நிமிடங்கள்ல கரியாகிடுது ... கொஞ்சம் யோசிச்சுப்பாத்தா, நம்ம கரியாக்கினது வெறும் பணத்த மட்டும் இல்ல ... ஒரு வகையில, பல குழந்தைகளோட படிப்பையும் சேத்துதான் ... ஆமாம் ... பட்டாசுத் தொழிற்சாலைகள்ள வேலைக்குப் போற குழந்தைகள் எல்லாரும் தன்னோட படிப்ப அடமானம் வச்சிட்டுதான் பட்டாசு உற்பத்தி பண்றாங்க ... "

" ஒரு வகையில யோசிச்சுப் பாத்தா, அந்த பட்டாசு உற்பத்தி இல்லேன்னா அந்தத் தொழிற்சாலைகள்ள வேலை பாக்குற குழந்தைகளோட குடும்பம் என்ன ஆகும் ... அதனாலதானே அவங்களுக்கு வருமானமே கிடைக்குது ... அது தவிர அந்தக் குடும்பங்களுக்கு தன்னோட குழந்தைகள படிக்க வைக்கிற வசதியும் இருக்காது ... " என்றார் ராமலிங்கம்.

" வருமானம் வருதுங்குறதுக்காக நம்ம எதிர்கால இந்தியாவோட தூண்களா விளங்கப்போற குழந்தைகளோட படிப்ப கெடுக்குறதுங்குறது எந்த விதத்திலும் சரியாகாது ... குழந்தைகளுக்கு இலவசக் கல்வியக் குடுத்து, அந்தக் குடும்பங்களும் வறுமையின்றி வாழ ஏதாவது செஞ்சாகனும் ... "

" நீ சொல்றது சரிதான் ... அவங்களோட வாழ்க்கைய சீராக்குறதுக்கு என்ன பன்னலாம், நீயே சொல்லேன் ... "

" அதுக்காகத்தான் என்னோட மனசுல ரொம்ப நாளா அசை போட்டுட்டிருந்த ஒரு யோசனை ... அரசாங்கத்தையே குற்றம் சொல்லிட்டு முடங்கிப்போய் உட்கார்ந்திருக்காம, நம்மளால முடிஞ்ச எதையாவது செய்யனும்னு தோனுச்சு ... அத உன்கிட்ட சொல்லனும்னுதான் உன்ன வர சொன்னேன் ... "

" நல்லதாப்போச்சு ... சொல்லுடா ... நம்மால ஏதாவது நல்ல காரியம் பன்ன முடியும்னா, நிச்சயமா அத செய்யலாம் ... "

" நம்ம நாட்டுல இருக்குற ஒவ்வொரு குடும்பமும் தீபாவளிக்கு பட்டாசுக்காக செலவு பண்ற பணத்துல ஒரு பங்க, அந்தப் பட்டாசு தொழிற்சாலைகள்ள வேலை பாக்குற குழந்தைகளுக்கும் அந்தக் குழந்தைகளோட குடும்பங்களுக்கும் குடுக்க தானே முன் வரணும் ... அதுக்கு நம்ம ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சு, அது மூலமா நம்மால முடிஞ்சத செய்யணும் ... மொதல்ல அந்தக் குழந்தைகளுக்குக் கல்வி, அப்பறம் அந்தக் குடும்பத்துல இருக்குறவங்களுக்கு சரியான வேலை வாய்ப்பு ... இத நம்ம செஞ்சதுக்கப்பறமா நம்மளோட தொண்டு நிறுவனத்த மக்கள்கிட்ட பிரபலப்படுத்தி அது மூலமா நேரடியா மக்களே அந்தக் குழந்தைகளுக்கு உதவ வழி வகை செய்யணும் ... இது மட்டும் நடந்துட்டா, அந்தக் குடும்பங்களுக்கு தினம் தினம் தீபாவளிதான் ... மக்கள் பட்டாசுக்காக செலவு செய்யறத கொறச்சிகிட்டா, அசம்பாவிதங்களும் குறையும், குழந்தைத் தொழிலாளர் முறையும் ஒழியும் ... இதுதாண்டா என் மனசுக்குள்ள இருந்த விஷயம் ... "

" அருமையான யோசனை ... நல்ல விஷயம் ... இன்னிக்கே அதுக்கான ஏற்பாடுகளைப் பண்ண ஆரம்பிக்கலாம் ... " என்று ராமலிங்கம் சொல்ல இருவரின் முகத்திலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி துளிர் விட்டிருந்தது.

ஐந்து வருடங்களுக்குப் பின் ...

எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை. சென்னை.

மாலை நேர மஞ்சள் வெயில் பொன்னைப் போல் மின்னிக் கொண்டிருந்தது. தேநீர் அருந்தியவாறே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான் கணேஷ்.

" இந்தாங்க ... தீபாவளிப் பலகாரம் சாப்பிடுங்க ... " என்றாள் பாசத்துடன் செல்வி.

குழந்தைக்கும் இனிப்பை ஊட்டிவிட்டு, " நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா ... " என்று குழந்தைக்குப் பாடம் கற்றுத்தரத் தொடங்கினாள் செல்வி.

மயிலை ரங்கநாதன் தெரு, தியாகராய நகர். சென்னை.

புத்தாடைகளை உடுத்திக்கொண்டு வெளியே கிளம்பத் தயாரானான் மகேஷ்.

" அம்மா ... நான் எங்க ஃப்ரெண்ட்சோட மெரீனா பீச்சுக்கு போயிட்டு வரேன் ... " - என்றபடியே விரைந்தான் மகேஷ்.

" பாத்து போயிட்டு வாடா ... " - வழியனுப்பி வைத்தாள் மகேஷின் அம்மா.

பின்னர் பூஜையறைக்குச் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகளை வரிசையாக வீட்டின் முற்றத்தில் அழகாக அடுக்கி வைத்து தீபம் ஏற்றினாள்.

தொலைபேசியில் அழைப்பு மணி ஒலித்தது.

" ஹாய் ராம் ... எப்படி இருக்க ... " - அப்போலோ மருத்துவமனையிலிருந்து சீஃப் டாக்டர்.

" ஹாய் டா ... நான் நல்லா இருக்கேன் ... நீ எப்படி இருக்க ... உனக்கு என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள் ... வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க ... " - ராமலிங்கம்.

" ரொம்ப நன்றி ... விஷ் யு த சேம் ... வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்க ... " - மறுமுனையில் டாக்டர்.

" நம்மளோட முயற்சிய‌ ஆரம்பிச்சு, இன்னியோட அஞ்சு வருசம் ஆகுது ... " - பெருமிதத்துடன் ராமலிங்கம்.

" ஆமாம் ... இப்பல்லாம் பட்டாசுகளுக்காக மக்கள் செலவு பன்ற தொகையும், பட்டாசுகளால நடக்குற விபத்துக்களும் ரொம்பவே கொறஞ்சிருக்கு ... " - டாக்டரின் குரலில் ஒரு சந்தோஷம் தெரிந்தது.

" மக்கள் கிட்ட நிச்சயமா ஒரு விழிப்புணர்வு பொறந்திருக்கு ... அதுக்கு நம்மளும் ஒரு வகையில காரணமா இருந்துருக்கோம்னு நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்குடா ... " - பெரிதாக ஏதோ ஒன்றை சாதித்த சந்தோஷத்தில் ராமலிங்கம்.

வெளியே ... புகையும், குப்பைகளுமில்லாமல், தெருவே அமைதியாகக் காணப்பட்டது. சத்தமின்றி, ரத்தமின்றி அழகாய் ஒரு தீபாவளி நடந்துகொண்டிருந்தது.

Wednesday, October 7, 2009

இனிய உளவாக - சிறுக‌தைச் சித‌ற‌ல்

ஒன்பது மணி அலுவலகத்துக்கு, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உதவியால் பத்தரை மணிக்கு, கசங்கிய சட்டையுடன், முகத்தில் வியர்வை வழிய, பதட்டம் நிறைந்த கண்களுடன் அலுவலகத்தில் நுழைந்தான் மகேஷ்.

யார் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று பயந்து பயந்து வந்தானோ, அவரே எதிரில் வர, மகேஷின் இதயம் பல முறை வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. இருப்பினும் அந்தப் பதட்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஒரு செயற்கைச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, " குட்மார்னிங் சார் ... " என்றான் மகேஷ்.

" குட்மார்னிங்கெல்லாம் இருக்கட்டும் ... என்ன மகேஷ் ... ஆஃபீஸ் வர்ற டைமா இது ... எத்தனை மணி ஆஃபீசுக்கு, எத்தனை மணிக்கு வர்றீங்க ... இன்னிக்கு ப்ராஜெக்ட் க்ளோஷர்னு தெரியும்ல ... ஒரு பொறுப்பே இல்லாம இவ்ளோ லேட்டா வர்றீங்க ... " என்று அவர் பதவிக்கே உரிய தொணியில் காய்ச்சி எடுத்தார் மகேஷின் டீம்லீடர்.

" இல்ல சார் ... பஸ் கிடைக்குறதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு ... " என்றான் அசடு வழிந்துகொண்டே மகேஷ்.

" இதெல்லாம் ஒரு ரீசன்னு சொல்லாதீங்க மகேஷ் ... போங்க ... போய் வேலைய பாருங்க ... "

" கூட்ட நெரிசலால் ஏற முடியாமல் மூன்று வண்டிகளை விட்டுவிட்டு, நான்காவது வண்டியில் சிரமப்பட்டு ஏறி, பட்டியில் அடைபட்ட ஆடுபோல் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாய் வந்திருக்கிறோம். இதெல்லாம் காரில் வந்திரங்குபவருக்கு எங்கே தெரியப் போகிறது ... ", என்று மனதுக்குள் புலம்பிக்கொண்டே கடுப்பில் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான் மகேஷ்.

அதற்குள் மணி பதினொன்றைத் தொட்டிருந்தது. அவசர அவசரமாகத் தனது வேலைகளை ஆரம்பித்தான் மகேஷ். அப்போதுதான் அவனது கைப்பேசிக்கு அந்த அழைப்பு வந்தது.

" குட்மார்னிங் சார் ... நாங்க ABC பேங்கிலிருந்து பேசுறோம் ... எங்க பேங்க்ல ஜாயினிங் ஃபீஸ் மற்றும் ஆன்னுவல் ஃபீஸ் எதுவும் இல்லாம கிரெடிட் கார்டு குடுத்திட்டிருக்கோம் ... உங்க மாத சம்பளம் எவ்வளவுன்னு சொன்னீங்கன்னா, இன்னிக்கே எங்க எக்சிக்யூடிவ்வ அனுப்பி டாகுமெண்ட்ஸ் கலெக்ட் பண்ணிக்கிறோம் சார் ... " என்று மூச்செவிடாமல் பேசிமுடித்தாள் அந்தப் பெண்மணி.

ஏற்கனவே டீம்லீடரின் வாயில் அகப்பட்டு கடுப்பாகியிருந்த மகேஷுக்கு இந்த அழைப்பு வந்தவுடன் மிகுந்த கோபம் வந்துவிட்டது.

உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையாம்மா ... ஏன் இப்படி ஃபோன் பண்ணி டார்சர் பண்றீங்க ... உங்களுக்கெல்லாம் யார் இந்த நம்பர் குடுக்குறா ... அறிவுங்குறதே இல்லையா உங்களுக்கெல்லாம் ... இப்படி ஃபோன் பண்ணி மத்தவங்கள தொல்லை பண்றோமேன்னு நீங்களெல்லாம் நினைக்கவே மாட்டீங்களா ... ஃபோன வைம்மா ... " என்று பொங்கியெழுந்தான் மகேஷ். டீம்லீடரிடமிருந்த அத்தனை எரிச்சலையும் அந்தப் பெண்மணியிடம் கொட்டித்தீர்த்தான் மகேஷ். பாவம் அந்தப் பெண், அவளுக்கு இது போன்ற மனிதர்களின் பேச்சு பழக்கப்பட்டதுதான் என்றாலும், அவள் மனதுக்குள்ளேயும் வருத்தங்கள் இருக்கத்தான் செய்தன. இத்தனை வசை மொழிகளையும் கேட்டுவிட்டு, அந்த சோகத்தைத் தனது குரலில் காட்டிக்கொள்ளாமல், அவளிடமிருந்த அடுத்த எண்ணைத் தொடர்பு கொண்டு, " குட்மார்னிங் சார் ... " என்று தொடர்ந்தாள்.

சற்று நேரம் கழித்து மகேஷின் கைப்பேசிக்கு மற்றுமொரு அழைப்பு வந்தது.

" சார் ... நாங்க XYZ பேங்கிலிருந்து பேசுறோம் ... எங்க பேங்க்ல குறைந்த வட்டிக்கு கடன் குடுக்குறோம் ... உங்களுக்கு விருப்பமிருந்தா ... " என்று அந்த வங்கி ஊழியர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த அழைப்பைத் துண்டித்தான் மகேஷ்.

" ச்சே ... என்னக் கொடுமடா இந்த வாழ்க்கை ... காலையில வீட்ட விட்டு கிளம்பினா சரியான நேரத்திற்கு வராத பஸ்ஸால கூட்ட நெரிசல் தொல்லை ... ஒரு வழியா போராடி ஆஃபீஸ் வந்தா டீம்லீடரோட தொல்லை ... பிறகு நாள் முழுதும் இந்த ஃபோன்னால தொல்லை " என்று முணுமுணுத்தபடியே தனக்குள் அலுத்துக்கொண்டு வேலை செய்யத் துவங்கினான்.

அதற்குள் மதிய உணவு இடைவேளையும் வந்தது. அம்மா பாசத்துடன் பக்குவமாய் சமைத்துக்கொடுத்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அவன் இருக்கைக்கு வந்தமர்ந்தான் மகேஷ்.

மீண்டும் அவனது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. இம்முறையும் அழைப்பு ஒரு லேண்ட்லைனிலிருந்து வருவதைப் பார்த்து கோபமடைந்த மகேஷ், மற்றுமொருமுறை இவர்களிடம் பேசத் திரானியில்லாதவனாய், அந்த அழைப்பைத் துண்டித்துவிட்டு தனது கைப்பெசியையும் அணைத்துவிட்டான்.

மகேஷ் சற்று கோபப்படுபவன்தான் என்றாலும், இது போன்ற தொல்லை கொடுக்கும் அழைப்புகள் என்று வந்துவிட்டால் அவன் கோபத்தின் உச்சிக்கே சென்று விடுவான். இதுதவிர விற்பனை அதிகாரிகளைக் கண்டாலும் மகேஷுக்குக் கோபம் எங்கிருந்தோ வந்துவிடும். இப்படித்தான் கடந்த வாரம் கூட தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் விற்க வீட்டிற்கு வந்த ஒருவரை மனம் நோகும்படி பேசி அனுப்பிவிட்டான் மகேஷ்.

இவ்வாறான தருணங்கள் மகேஷின் தினசரி வாழ்வில் ஒரு தொடர்கதையாக தொடர்ந்து கொண்டே இருந்தன. அப்போதுதான் மகேஷுக்கு அவனது வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கினார். பல வரன்கள் அமைந்தும், எதுவும் மகேஷின் மனதிற்குப் பிடிக்காமல் தட்டிப்போக, ரேகாவின் புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே, மகேஷின் மனது ஒரு முழுமையடைந்தது. மகேஷின் பெற்றோருக்கும் ரேகாவை மிகவும் பிடித்திருந்தது. அதற்கு மேலும் எந்தப் பெண்ணின் புகைப்படத்தையும் பார்க்காமல், அந்தப் பெண்ணின் வீட்டிற்குத் தகவல் கொடுத்தனர் மகேஷின் பெற்றோர்.

பெண் பார்க்கும் படலமும் முடிந்தது. முதலில் ரேகா பணிபுரிவது ஒரு வங்கியில், என்பது மட்டும்தான் மகேஷுக்குத் தெரியும். பின்புதான் அவள் அந்த வங்கியில், வாடிக்கையாளர்கள் சேவைப் பிரிவில் பணிபுரிவது தெரிய வந்தது. மகேஷின் மனதில் அந்த நிமிடம் ஒரு சிறு தடுமாற்றம் ஏற்பட்டாலும், அதை அவன் அப்போது பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ரேகாவின் பெற்றோர் மகேஷுக்குக் கொடுப்பதாகக் கூறிய முப்பது சவரன் நகையும், ஒரு புதிய மோட்டார் சைக்கிளும், அவனை அதற்கு மேலும் அதைப்பற்றி யோசிக்க விடவில்லை.

மகேஷுக்கும், ரேகாவுக்கும் திருமணம் நடந்தேறியது.

பத்து நாள் தேனிலவுப் பயணத்திற்குப் பிறகு, மறுநாள் காலை, மகேஷும், ரேகாவும், தனது அலுவலகத்திற்குப் புறப்பட்டனர். வரதட்சணையாக வந்த வண்டியில், ரேகாவை அவளது அலுவலகத்தில் இறக்கிவிட்டு, மிடுக்குடன் தனது அலுவலகத்திற்கு வந்திறங்கினான் மகேஷ்.

போக்குவரத்து நெரிசலால், இன்றும் மகேஷால் அலுவலகத்திற்கு சரியான நேரத்தில் வந்து சேர முடியவில்லை.

மகேஷ் உள்ளே நுழைந்தவுடனேயே அவனது சக தோழர்கள் மற்றும் தோழிகள் அனைவரும் அவனை சூழ்ந்து அவனை வரவேற்றனர்.

" ஹாய் மகேஷ் ... கங்க்ராட்ஸ் ... ".

" விஷிங் யு எ வெரி ஹப்பி மேரீட் லைப் ... ".

" நீங்கள் என்றென்றும் நலமுடன், சகல செல்வங்களும் பெற்று வாழ எனது மனம் நிறை வாழ்த்துக்கள் ... ".

இவை அனைத்தும் மகேஷுக்குக் குவிந்த வாழ்த்துக்கள். இத்தனை வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு, அவனது இருக்கைக்குச் செல்வதற்க்குள்ளாகவே பத்தரை மணி ஆகியிருந்தது.

அவசர அவசரமாக தனது கணிப்பொறியினை இயக்கி, அதுவரை அவனுக்கு வந்து குவிந்திருந்த மின்னஞ்சல்களைப் பார்த்தான். மகேஷுக்கு மின்னஞ்சலில் வரிசையாக வாழ்த்துக்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தன. அதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மணி பதினொன்றை நெருங்கியவுடன், தனது நண்பனை அழைத்துக் கொண்டு தேநீர் அருந்துவதற்குச் சென்றான் மகேஷ். அப்போதுதான் அந்த அழைப்பு மகேஷுடைய நண்பனின் அலைபேசிக்கு வந்தது.

" ஹலோ சார் ... குட்மார்னிங் ... ஐ அம் காலிங் ஃப்ரம் ரைட் பேங்க் ... உங்களோட கிரெடிட்கார்டை பேஸ் பண்ணி உங்களுக்கு பர்சனல் லோன் அப்ரூவ் ஆகியிருக்கு சார் ... " என்று பேச்சைத் தொடர்ந்தது அந்தக் குரல்.

" இப்ப எனக்கு லோன் எடுக்க விருப்பம் இல்ல மேடம் ... உங்களோட தகவலுக்கு ரொம்ப நன்றி ... எனக்கு எப்ப லோன் தேவைப்படுதோ, நானே உங்கள தொடர்பு கொள்றேன் ... " என்று மென்மையான குரலில் மகேஷின் நண்பன் பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே, இடையில் தடுத்து அந்தக் கைப்பேசியை வாங்கி மகேஷ் பேசினான்.

" ஏம்மா ... உங்கள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எத்தன தடவ சொல்றது ... படிச்சிருக்கீங்களா இல்லையா நீங்கல்லாம் ... இந்த மாதிரி வேலை பார்க்குறதுக்கு எங்கயாவது போய் பிச்சை எடுங்க ... எங்கள ஏம்மா இப்படி ஃபோன் பண்ணி தொல்லை பண்றீங்க ... " என்று கூறி அழைப்பைத் துண்டித்தான் மகேஷ்.

" இவங்ககிட்ட போய் இவ்வளவு மரியாதையா பேசிட்டு இருக்க ... வேண்டாம்னு சொல்லிட்டு ஃபோன வைக்க வேண்டியதுதானடா ... " என்றான் மகேஷ்.

" இல்ல மகேஷ் ... அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் ... அவங்களோட வேலையே இதுதாண்டா ... எப்படியாவது பேசி, வாடிக்கையாளரோட சம்மதத்தை வாங்கிடனும்னுதான் அவங்களும் போராடுறாங்க ... அவங்களோட வேலையிலும் கஷ்டம் இல்லாம இல்லடா ... எல்லாரையும் சமாளிச்சு, அவங்க சொல்றதுக்கு கோபப்படாம, மனச கல்லாக்கிட்டு பேசனும்டா ... அது சாதாரண விஷயமில்ல ... நமக்கு கம்ப்யூட்டரோட மட்டும் பழகிப் பழகி, மனுஷங்ககிட்ட எப்படி பழகனுங்குறதே தெரியாமப் போச்சுடா ... " - என்றான் மகேஷின் நண்பன்.

" உன்ன மாதிரி ஆளுங்களாலதான், இவங்கெல்லாம் இப்படி ஃபோன் பண்ணி தொல்லை குடுக்குறாங்கடா ... நீ என்னதான் சொன்னாலும், இவங்கள எல்லாம் என்னால மன்னிக்கவே முடியாதுடா ... " - என்றான் மகேஷ்.

அதற்கு மேலும் மகேஷிடம் பேசிப் பயனில்லை என்பதை நன்கு உணர்ந்திருந்த அவனது நண்பன், ஒரு சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு, தனது இருக்கைக்குத் திரும்பினான்.

மீண்டும் வேலைப் பளுவில் மூழ்கிப்போனான் மகேஷ்.

சரியாக 1 மணிக்கு, மதிய உணவுக்காகச் சென்று, மனைவி அன்புடன் கட்டிக்கொடுத்த ருசியான உணவை உண்டுவிட்டு மீண்டும் தனது இருக்கைக்கு வந்து வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் மேற்கே கடலில் கலக்கும் மாலைப் பொழுதில் மகேஷ், அருகிலிருந்த ஒரு பூங்காவில் அமைந்திருக்கும் கடைக்கு தேநீரைச் சுவைப்பதற்காக வந்தான். தேநீரை அருந்திக்கொண்டிருக்கும்போது, அருகில் பூங்காவின் புல்தரையில் அமர்ந்து ஒருவர் தான் எடுத்து வந்திருந்த உணவை உண்பதைப் பார்த்தான் மகேஷ். அவர் அருகிலிருந்த தனது நண்பரிடம் பேசியது, அரசலும் புரசலுமாக, அங்கு தேநீர் அருந்திக்கொண்டிருந்த மகேஷுக்குக் கேட்டது.

" இன்னிக்கு மொத்தம் பத்து பெட்டி வித்துட்டேன் ... ஒரு கஸ்டமர் வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு ... அதனாலதான் மத்யானம் சாப்பிட முடியல ... இதெல்லாம் நமக்குப் பழகிப்போனதுதானே ... இன்னிக்குள்ள இன்னும் நாலு வித்து முடிக்கணும் ... எப்படி விக்கப்போறேன்னே தெரியல ... "

இதைக்கேட்ட மகேஷின் மனம் அந்த நபருக்காக ஒரு நிமிடம் இரக்கப்பட்டாலும், புத்தி அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதாக இல்லை. அவருக்காக வருத்தப்படவும் தயாராக இல்லை.

சீக்கிரமாக அலுவலகத்தை விட்டுக் கிளம்பி, வீட்டிற்குச் சென்று மனைவியுடன் சற்று நேரம் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று நினைத்த மகேஷை, அவனுக்கென ஒதுக்கப்பட்டிருந்த வேலை கிளம்ப விடவில்லை. பதினைந்து நாள் விடுமுறையில் சென்றதால், நிலுவையிலிருந்த வேலைகளை ஓரளவு முடிப்பதற்குள்ளாகவே இரவு பத்து மணியாகிவிட்டது. அவசர அவசரமாக வண்டியைச் செலுத்தி வீட்டிற்கு வந்தான் மகேஷ்.

ரேகா மகேஷின் வருகைக்காக உணவருந்தாமல் காத்திருந்தாள். மகேஷின் பெற்றோர் அப்போதுதான் உணவு உண்டுவிட்டு உறங்கச் சென்றிருந்தனர்.

" சாரி ரேகா ... ஆஃபீஸ்ல இருந்த வேலைய முடிச்சிட்டு வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாயிடுச்சு ... சாப்டியா ரேகா நீ ... " - என்றான் பாசமாக.

" இல்ல மகேஷ் ... உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டிருக்கேன் ... அம்மாவும், அப்பாவும் இப்பதான் சாப்டுட்டு தூங்கப் போனாங்க ... போங்க, போய் முகம் கழுவிட்டு, சாப்பிட வாங்க ... " - என்றாள் ரேகா.

" நீயும் சாப்டுட்டு படுத்து தூங்க வேண்டியதுதானே ரேகா ... எனக்காக ஏன் வெயிட் பண்ணிட்டிருக்க ... சரி ... இதோ, அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேம்மா ... " - என்றான் மகேஷ்.

இருவரும் சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு மகேஷ், நாளைய வேலைகளுக்கான ஏற்பாடுகள் சிலவற்றைச் செய்து கொண்டிருந்தான்.

அப்போதுதான் அது நிகழ்ந்தது ...

ரேகா ஏதோ எழுதிக்கொண்டிருப்பதை தூரத்திலிருந்த மகேஷ் பார்த்தான். பிறகு அவள் எழுதிக்கொண்டிருந்த கையேட்டில் அவளது கண்ணீர்த்துளிகள் சிந்துவதைப் பார்த்து அதிர்ந்து போனான் மகேஷ். மகேஷுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. திருமணமான புதிது என்பதால், உடனே ரேகாவிடம் சென்று கேட்பதற்கும் தயக்கப்பட்டு, திகைப்பில் நின்று கொண்டிருந்தான் மகேஷ்.

சிறிது நேரம் கழித்து, ரேகா உறங்கியவுடன், எடுக்கலாமா, வேண்டாமா, என்ற தயக்கத்துடனேயே அவளிருந்த அறைக்குச் சென்று, அந்த கையேட்டைப் பிரித்தான் மகேஷ். கையேடு முழுவதும் அவளின் கண்ணீரால் நிரம்பியிருந்தன. கையேட்டின் ஒவ்வொரு பக்கங்களும், அவள் கண்ணீரால் குடமுழுக்கு செய்யப்பட்டு, உப்புப் பூத்து உலர்ந்து போயிருந்தன. அந்த ஏட்டில், ரேகா, தான் வாடிக்கையாளர்களிடம் பேசியபோது, அவர்களால் அவமரியாதைக்குட்படுத்தப்பட்டு, தன் மனதை மிகவும் பாதித்த உணர்வுகளைப் பதிவு செய்வது வழக்கம். ரேகவைப் பொறுத்தவரை இவையெல்லாம் அவளுக்குப் பழகிப்போன ஒன்றுதான் என்றாலும், மற்றவர்களிடம், தன் மனைவி பட்ட அவமானங்களைப் படிக்கப்படிக்க, மகேஷின் மனம், தரையில் விழுந்த மீன் போலத் துடித்தது. யார் யாரோ தன் மனைவியை ஏளனமாகப் பேசியதைப் பார்க்க மகேஷால் முடியவில்லை. ரேகாவின் மனக்குமுறலை, மகேஷால் அந்தக் கையேட்டின் மூலம் தெளிவாக உணர முடிந்தது. மனதைக் கல்லாக்கிக்கொண்டு கையேட்டின் பக்கங்களைப் புரட்டிய மகேஷுக்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சிக் காத்திருந்தது. அந்த ஏட்டில், கடைசியாக எழுதப்பட்டிருந்தப் பக்கத்தில், இன்றைய தேதியைக் குறிப்பிட்டு, அதனுடன் இன்று அவள் வருத்தத்திற்குள்ளான வார்த்தைகளையும் எழுதியிருந்தாள். அதைப்படித்த மகேஷ் நிலைகுலைந்து போனான். ஏனென்றால், இன்று காலை மகேஷ், அவனது நண்பனின் கைப்பேசியில் பேசிய வார்த்தைகள் அதில் எழுதப்பட்டிருந்தன. அதைப் பார்த்த மகேஷால், அவன் செய்த தவற்றை ஜீரணிக்கவே முடியவில்லை. இதுவரை அவன் செய்த தவறுகளையும் அப்போது உணர்ந்தான். கையேட்டின் அந்தப் பக்கத்தில், ரேகா சிந்திய கண்ணீர்த்துளிகளின் ஈரம் காய்வதற்கு முன்பாகவே, அதனுடன் மகேஷ் சிந்திய கண்ணீர்த்துளிகளும் விழுந்து கலந்தன. மகேஷின் நண்பன் கூறி உணர முடியாத உணர்வுகளை, ரேகாவின் கண்ணீர் மகேஷுக்கு உணர்த்தியது. மற்றவர்களின் மனம் புண்படும் வகையிலான சொற்களைக் கூற, எந்த வித உரிமையும் நமக்கில்லை என்பதை அப்போது உணர்ந்தான்.

இனிய சொற்கள் இருக்கும்போது, அதனை விடுத்து, இதுவரை தான் வாழ்ந்த வாழ்நாளின் பெரும்பகுதியும் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தியது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை அப்போது நன்றாகவே உணர்ந்தான் மகேஷ். தன்னுடைய மனைவி பட்ட வருத்தத்தின் வேதனைகளை, இனி வேறு யாரும் தன்னால் படக்கூடாது என முடிவெடுத்தான்.

மறுநாள் காலை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே அலுவலகத்திற்குப் புறப்பட்டான் மகேஷ். சரியாக ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் நுழைந்த மகேஷைப் பார்த்து அவனது நண்பர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினர்.

" என்னடா மகேஷ் ... இவ்வளவு சீக்கிரமாவே ஆஃபீசுக்கு வந்துட்ட ... இந்த ஆஃபீஸ பொருத்தவரைக்கும் சரியான நேரத்திற்கு நீ வந்ததா சரித்திரமே இல்லையேடா ... " - என்று கிண்டலாகக் கேட்டான் மகேஷின் நண்பன்.

அதற்கு எதுவும் பேசாமல், ஒரு குருஞ்சிரிப்பைச் சிரித்துவிட்டு, தனது இருக்கைக்குச் சென்று வேலைகளைத் துவங்கினான் மகேஷ். எப்போதும் இல்லாமல் இன்று சீக்கிரமாகவே வேலைகளைத் துவங்கியதால், பதட்டமின்றி வேலைகளைச் செய்தான் மகேஷ்.

அப்போது ஓர் அழைப்பு மகேஷின் கைப்பேசிக்கு வந்தது.

" ஹலோ சார் ... ஐ அம் காலிங் ஃப்ரம் பெஸ்ட் பேங்க் ... வி ஆர் ப்ரோவைடிங் பர்சனல் லோன்ஸ் வித் த மினிமம் இன்ட்ரஸ்ட் ரேட்ஸ் ... இஃப் யூ ஆர் இன்ட்ரஸ்டட், வி வில் கலெக்ட் த டாகுமென்ட்ஸ் ஃப்ரம் யூ ... " - என்றாள் எதிர்முனையில் ஒரு பெண்.

" சாரி மேடம் ... இப்ப எனக்கு பர்சனல் லோன் தேவைப்படல ... ஆறு மாசத்துக்கப்புரமா தேவைப்படலாம்னு நினைக்கிறேன் ... எனக்கு எப்ப தேவைப்படுதோ, அப்ப நானே இந்த நம்பருக்கு கால் பண்றேன் மேடம் ... " - என்று மென்மையாக பதிலளித்தான் மகேஷ்.

பேசி முடித்தவுடன், தன்னை மதித்து ஒருவர் பேசிய சந்தோஷம் அந்தப் பெண்ணுக்கும், மென்மையாகப் பேசிய த்ருப்தி மகேஷுக்கும் இருந்தது ...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
( திருக்குறள் : 100 )

( பால் : அறத்துப்பால் ; உட்பிரிவு : இல்லறவியல் ; அதிகாரம் : இனியவை கூறல் )

களவு போன கனவு - சிறுக‌தைச் சித‌ற‌ல்

காலைச் சூரியன் முகம் மலர, எங்கும் படர்ந்திருந்த மார்கழிப் பனி விலக, கதிரவன் தன் இளங்கதிர்களால் ரமேஷின் தலையை செல்லமாக வருடி வாழ்த்தியது. சூரியனின் ஒளி பட்டு கண்கள் கூச, அதற்கு மேலும் தூங்கிக்கொண்டிருக்கமுடியாமல், படுக்கையைவிட்டு எழுந்தான் ரமேஷ்.

குளித்துவிட்டு, வழக்கத்தைவிட சற்று அதிகநேரம் இன்று இறைவனை வழிபட்டு, சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தான்.

" ரமேஷ் ... மத்தியானத்துக்கு புளிசாதமும், புதினா துவையலும் கட்டி வச்சிருக்கேன் ... மிச்சம் வைக்காம சாப்ட்டுடு ... போற வழியில கண்டதயும் வாங்கி சாப்பிடாதடா கண்ணா ... பத்திரமா போய்ட்டு வா ... நீ நெனச்சபடியே எல்லாம் நடக்கும் ... " என்று தன் தாய்ப்பாச மிகுதியில், ரமேஷை ஒரு சிறு குழந்தையாகவே நினைத்து, அவனுக்கு அறிவுரைகள் கூறினாள் ரமேஷின் தாய். உண்மைதானே ... !!! பிள்ளைகள் எவ்வளவுதான் வளர்ந்திருந்தாலும், எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும், பெற்றவர்களுக்கு தன் பிள்ளைகள் இன்னும் குழந்தைகள்தான்.

" ஆல் த பெஸ்ட் ரமேஷ் ... " - இது ரமேஷின் தந்தை.

" பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா ... " என்ற தங்கையின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டு, ஒரு பெட்டிக்குள் தனக்குத் தேவையான துணிமணிகளுடன், அவனுக்கென்று இதுவரை அவன் சேர்த்து வைத்திருந்த சொத்துக்களான, பத்தாம் வகுப்பு, பணிரண்டாம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புச் சான்றிதழ்களை எடுத்துக்கொண்டு இரயில் நிலையத்திற்கு புறப்பட்டான் ரமேஷ்.

ரமேஷ் இதுவரை கிட்டத்தட்ட ஒரு ஐம்பது நிறுவனங்களிலாவது வேலைக்காக வின்னப்பித்திருப்பான். ஆனால் அவற்றுள், ஒரு நிறுவனங்களிடமிருந்து கூட அழைப்பு வராத நிலையில், துவண்டு போய்க்கிடந்த ரமேஷின் வாட்டத்தைப் போக்குமாறு, மும்பையிலிருக்கும் ஒரு முன்னனி நிறுவனம், நேர்காணலுக்காக சென்ற வாரம் அவனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதற்காகத்தான் இப்போது மும்பைக்குச் செல்ல இரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.

ரமேஷின் குடும்பம் சற்று ஏழ்மையான குடும்பம். தந்தையின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து கொண்டிருந்த ரமேஷின் குடும்பத்திற்கு, அவர் ஒரு மாதத்துக்கு முன்பு பணியிலிருந்து ஓய்வு பெற்றது மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இனி குடும்பச்சக்கரத்தை எப்படி ஓட்டப்போகிறோம் என்ற கேள்விக்குறி அவர்கள் அனைவரின் மனதிலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இன்னும் இரண்டு வருடங்களுக்குள், தன் மகளுக்குத் திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்ற கனவிற்கு நடுவில், ரமேஷை மட்டுமே முழுக்க முழுக்க நம்பியிருந்தனர் அவனது பெற்றோர். எப்படியும் ரமேஷுக்கு, விரைவில் ஒரு நல்ல வேலை கிடைத்து, குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் பனி போல் விலகிவிடும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களிடம் இருந்தது. இதை ரமேஷும் நன்கு உணர்ந்திருந்தான்.

பெற்றோரின் இந்தக் கனவுகளை மூட்டை கட்டிக்கொண்டு, இரயிலில் ஏறி அமர்ந்தான் ரமேஷ். ரமேஷுக்கு இது முதல் நேர்காணல் என்பதால், மிகுந்த பதட்டம் அவனுக்குள் காணப்பட்டது.

" இந்த வேலை மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால், நம் குடும்பத்திற்கு ஒரு விடிவுகாலம் பிறந்துவிடும் ... தங்கைக்கும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க முடியும் ... " என்று தன் மனதுக்குள்ளேயே நினைத்துக்கொண்டு, தான் எடுத்து வந்த பெட்டியை பக்கத்தில் வைத்துவிட்டு, சற்று நேரம் கண்ணயர்ந்தான் ரமேஷ்.

அப்போதுதான் அந்தக் கொடுமை ரமேஷுக்கு இழைக்கப்பட்டது. சிறிது நேரம் கழித்து விழித்தெழுந்த ரமேஷுக்கு, அவன் எதிர்பார்த்திராத வகையில் அவனுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவன் கண்ட கனவுகளை நோக்கிப் பயணம் செய்வதற்கு, அவனுக்கு ஒரே ஊன்றுகோலாக இருந்த அவனது சான்றிதழ்களை வைத்திருந்த பெட்டி களவாடப்பட்டிருந்தது. வாழ்வில் முன்னேறி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் வாழ்க்கைப்பயணம் செய்துகொண்டிருந்த ரமேஷின் மனது சுக்கு நூறாகிப் போனது. அவனது துக்கத்திற்கு அளவே கிடையாது. " நமக்கு இந்த வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், நம்மை நம்பி மட்டுமே நம் குடும்பம் அங்கு காத்துக்கொண்டிருக்கிறதே ... இனி என்ன செய்யப்போகிறோம் ... " என்ற எண்ணம் ரமேஷின் மனதை பலமாகப் பதம் பார்க்கத் தொடங்கியது. மொழி தெரியாத ஊரில், எங்கு போகப்போகிறோம் என்ற முகவரியுமில்லாமல், தனக்கென வைத்திருந்த சான்றிதழ்களும் பறிபோய் விட, நிராயுதபாணியாக செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றான் ரமேஷ். களவுபோனது ரமேஷின் பெட்டி மட்டுமல்ல, அவன் இதுவரை அவனது மனதிற்குள் விதைத்திருந்த கனவுகளும், பெற்றோர் அவன் மீது வைத்திருந்த கனவுகளும் கூடத்தான்.

தன் மீது நம் பெற்றோர் வைத்திருந்த நம்பிக்கையை குலைத்துவிட்டோமே என்ற எண்ணத்தில், இனி நாம் வாழ்வது யாருக்கும் பயனில்லை என்று நினைத்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவெடுத்து, ஓடிக்கொண்டிருந்த இரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டான் ரமேஷ்.

பெட்டியை களவாடிச்சென்றவன், அதனை திறந்து பார்க்கையில், அதிலிருந்த முன்னூறு ரூபாய் மட்டுமே அவனது கண்களில் பட்டது. அதிலிருந்த சான்றிதழ்கள் ஒரு காகிதம் என்ற அளவில்தான் அவனுக்கு தென்பட்டது. பெட்டியிலிருந்து, பணத்தையும், ரமேஷுடைய துணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு, மற்றவைகளை வீசியெரிந்துவிட்டு, அவ்விடத்திலிருந்து ஓடிச் சென்று அடுத்து வந்த இரயிலில் ஏறி, தனது சேவையைத் தொடர்ந்தான் அந்தக் கள்வன்.

ரமேஷின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அவனது குடும்பத்துக்கு, ஒரு வாரத்திற்குப் பின்னர், ரமேஷின் சான்றிதழ்களை மீட்டுக் கொடுத்தனர் காவல்துறையினர்.

இப்போது அந்தச் சான்றிதழ்கள் யாருக்குப் பயன்படும் ? அவைகளால் இனி யாருக்குப் பயன் ? அந்தச் சான்றிதழ்களால், ரமேஷை அவன் குடும்பத்தினர் திரும்பப் பெற முடியுமா ?

தான் பல கனவுகளுடன் தன் மகனுக்காக கட்டி வைத்திருந்த மனக்கோட்டை தகர்ந்ததையடுத்து, தன் மகன் மீது, தான் கட்டிய மணல்கோட்டையின் அருகில் நின்று, கண்ணீருடன் அந்தச் சான்றிதழ்களை கிழித்துப் போடுகின்றனர் ரமேஷின் பெற்றோர்.

இது ஒரு கதைதான் என்றாலும், இதில் வருவது போல், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு கொலை, கொள்ளையில் ஈடுபடும் கள்வர்களின் கூட்டம், இந்தச் சுதந்திர இந்தியாவில் இன்னும் சுதந்திரமாய் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பிறருக்குச் சொந்தமான பொருளை அடைய வேண்டும் என்று மனதளவில் ஆசைப்பட்டாலும் கூட அது மகத்தாய பாவமாகும்.

இக்கதையில் நாம் கண்டது போல், கள்வனின் கண்களுக்கு வெறும் வெற்றுக் காகிதங்களாக தோன்றியவை, ரமேஷுக்கு வாழ்க்கையாக அமைந்திருந்தது. அந்தக் கள்வனால் ரமேஷின் வாழ்வும், அவனது பெற்றோரின் கனவுகளும் பறிபோனது. ஆகையால் பிறர் பொருளுக்கு எள்ளளவும் ஆசைப்படாமல் வாழ்வது உலகில் தலையாய பண்பாகும்.

தெய்வப்புலவராம் வள்ளுவப் பெருந்தகை, தமிழ் மறை என்று போற்றப்படும் திருக்குறளில் கூறியதுபோல், பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதே கூடக் குற்றமாகும். குற்றமான செயல்களை மனத்தால் நினைத்தலும் மகத்தாய பாவமாகும்.

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்
( திருக்குறள் : 282 )

( பால் : அறத்துப்பால் ; உட்பிரிவு : துறவறவியல் ; அதிகாரம் : கள்ளாமை )

நிம்மதியைத்தேடி - சிறுக‌தைச் சித‌ற‌ல்

காலை மணி 5:40. ட்ரெயினிலிருந்து வரும் சத்தத்தில் தாம்பரம் இரயில்வே ஸ்டேஷனே அலறியது. வழக்கமாக ஒரு மணி நேரமோ, ஒன்றரை மணி நேரமோ தாமதமாக வரும் 'தஞ்சாவூர் பாசஞ்சர்', இன்று வழக்கத்திற்கு மாறாக வெறும் பத்து நிமிடம் மட்டுமே தாமதமாக வந்தது.

கையில் அக்பர் காலத்துப் பெட்டி ஒன்றுடன் ரயிலில் இருந்து இறங்கி, ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்திறங்கும்போது, ” சார் ஆட்டோ ”, ” ஆட்டோ வேணுமா சார் ” என்று ஆட்டோவை ஏலம் விட்டவாறு, லட்டுவை ஈ மொய்ப்பது போல், சேகரை மொய்த்து விட்டனர் நம் ஆட்டோக்காரர்கள்.

இதனைப் பார்க்கும்போது சென்னைக்கு முதன்முதலாக வந்த சேகருக்கு படு ஆச்சர்யம்.

“ நம்ம ஊர்ல ஆட்டோவே கிடையாது. அப்படியே ரெண்டு, மூனு ஆட்டோ இருந்தாலும், அவங்கள கூப்டா வருவதற்கு ஆயிரம் யோசிப்பாங்க. ஆனா, இங்க கொஞ்சம் விட்டா ஆட்டோவுக்குள்ளயெ அமுக்கிப் போட்டுக் கொண்டு போயிடுவாங்க போலிருக்கே ” என்று மனதில் நினைத்தபடி நடக்க ஆரம்பித்தான் சேகர்.

“ வாங்க சார்... ஆட்டோ வேணுமா சார்... எங்க போகனும் சார்... ” என்று மூச்சுக்கு முன்னூறு தடவை 'சார்' போட்டு கூப்பிட்ட ஆட்டோ ட்ரைவருக்கு, ” எங்க போறதுன்னுதாம்பா தெரில... ” என்ற வேடிக்கையான பதில் சேகரிடமிருந்து வந்ததுமே கடுப்பாகிப் போனவர், ” சாவுக்கிராக்கி, கார்த்தாலேந்து வன்ட்டான் பாரு பொட்டிய தூக்கினு... ” என்று முனுமுனுத்துக்கொண்டே வேறு ஒருவர் பக்கம் திரும்பி மாமூல் டயலாக்கைப் பேச ஆரம்பித்தார்.

சேகர் சொன்ன வார்த்தை வேடிக்கையாக இருந்தாலும், அது தான் நிஜம்.

ஆடுதுறை பக்கத்தில் திருமங்கலக்குடி எனும் கிராமத்தில், அண்ணன், தங்கை மற்றும் அப்பா, அம்மாவோடு சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த விளையாட்டுப்பிள்ளை சேகர். சில காலங்களுக்கு முன் சேகரின் அப்பா சிவலோகப்ராப்தி அடைந்து விட, குடும்பப் பொறுப்பு முழுவதும் வீட்டின் மூத்த பையன் பாலு மீது விழுந்தது. தங்கை லக்ஷ்மிக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலையும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்பும், கஷ்டப்பட்டு எட்டிப்பிடித்து எட்டாவது படித்துக் கொண்டிருந்த பாலுவுக்கு வர, அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டு விவசாயத்தில் இறங்கி விட்டான். சேகர் மட்டும் எப்படியோ கஷ்டப்பட்டு பி.காம் முடித்துவிட்டான். லக்ஷ்மி மட்டும்தான் அந்த குடும்பத்திலேயே நன்றாகப் படிப்பவள். அவள் இப்போது +2 படித்துக்கொண்டிருக்கிறாள்.

திருமங்கலக்குடி மாணவ, மாணவியர்களுக்கு கல்லூரி என்றாலே அது ஆடுதுறையில் உள்ள 'சக்தி கல்லூரி' தான். அந்தக் கல்லூரியில்தான் சுற்று வட்டார கிராமத்திலுள்ள கல்லூரி மாணவ மணிகள் சங்கமிப்பர். எது படிக்க வேண்டுமென்றாலும், எது ஒன்று வாங்க வேண்டுமென்றாலும், அது ஆடுதுறையில்தான். ஆடுதுறைதான் இவர்களுக்கு டவுன் என்றாலும், அதுவும் முக்கால்வாசி கிராமம்தான்.

சேகர், அப்பா செல்லம். அப்பா இருந்தவரை அவனுக்கு ஏக உபசாரம். பட்டப்படிப்பை முடிக்கும் வரை வீட்டில் அவனை ஒரு மனிதனாகவாவது மதித்தார்கள். ஆனால் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கிய மறுகனமே அவன் வீட்டில் அவனை விவசாயம் செய்யும்படி விரட்டினர். இல்லை வேறு ஏதாவது பிடித்த வேலை செய்வதாக இருந்தாலும் சரி என்றனர். ” பி.காம் முடித்து பட்டம் வாங்கிய பின் வயலில் இறங்கி விவசாயம் செய்வதா ? ” என்ற கேள்வி அவனுக்குள் எழ, அவன் விவசாயம் செய்ய மறுத்தான். வீட்டில் அனைவரும் அவனை வேலை செய்யச்சொல்லி வற்புறுத்த, அவர்களின் தொந்தரவு தாங்காமல் அவனுக்கென்று இருந்த நான்கு பேண்ட், ஷர்ட்களை எடுத்து அவன் பரம்பரைக்கென்று இருந்த ஒரே ஒரு பழங்கால ட்ரங்க் பெட்டிக்குள் போட்டுக்கொண்டு நிம்மதியைத்தேடி கிளம்பி வந்து விட்டான் சென்னைக்கு.

காலைச்சூரியன் வரலாமா, வேண்டாமாவென யோசித்துக்கொண்டே மெதுவாகத்தலைகாட்டியது.

அருகிலிருந்த டீக்கடைக்குச்சென்று, ”மாஸ்டர்... ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க...” என்றபடி டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான் சேகர்.

பெட்டியைப்பார்த்தவுடன், ” என்னப்பா... ஊர்லெந்து ஓடிவன்ட்டியா ? கிராமத்துலேந்து வர்றவங்களுக்கெல்லாம் எங்க சென்னைதான் வழிகாட்டி தலைவா ! ” என்று சென்னையின் பெருமையை மார்தட்டிக்கொண்டான் டீ போடுபவன்.

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் சேகருக்கு ஒரு தன்னம்பிக்கை பிறந்தது.

‘வெண்ணீரைச்‘ சுவைத்துக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான். ரோட்டில் காரும், பஸ்ஸும் புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. இது போதாதென்று இரு சக்கர வாகனங்கள் வேறு. ஒரே புகை மண்டலமாய் காலை ஏழு மணிக்கே தாம்பரம் காட்சியளித்தது. அப்படியே நடக்க ஆரம்பித்தான்.

சாலையோரமாக, தொலைபேசி நிர்வாகத்தினரும், சாலை போக்குவரத்து நிர்வாகத்தினரும், வெட்டி வைத்திருந்த குழிகள் சரியாக மனிதர்களுக்கு தோண்டியவை போலவே இருந்தன. அப்போது சாலை போக்குவரத்துக் கழகம் கவனிக்காத சில சாலைகளை பார்த்த சேகர், நமது கிராமத்தில் கூட இவ்வாறு ‘அழகான‘ சாலைகளை பார்க்க முடிவதில்லையே என்று மனதுக்குள்ளேயே வேடிக்கையாக அலுத்துக்கொண்டான்.

அப்படியே நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பெட்டிக்கடை ஒன்றிலிருந்து ‘தினத்தந்தி‘ பேப்பர் ஒன்றை வாங்கி வேலை வாய்ப்புகளைப் பார்த்த சேகருக்கு, அவன் பி.காம் படித்த அளவிற்கு அவனுக்கு ஏற்ற வேலைகள் மூன்று மட்டுமே அகப்பட்டன. அந்நிறுவனங்களின் முகவரிகளைக் குறித்துக் கொண்டு, முதல் கம்பெனிக்குச் சென்றால், ” You have to deposit 10,000/- Rupees for your Job ” என்றார்கள்.

இவனிடம் அப்போது ஒரு ஓட்டைப்பெட்டிக்குள் நாலைந்து கந்தல் துணிகளும், ஒரு அழுக்கு படிந்த ஐம்பது ரூபாய் நோட்டும்தான் இருந்தது. அடுத்த கம்பெனிக்குச் சென்றவனை, ” மார்க் பத்தாதுப்பா ” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

“ கடைசியாக ஒரே ஒரு கம்பெனிதான் இருக்கு... போய்ப் பார்ப்போம்... ” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கடைசி கம்பெனிக்குச் சென்று பேசினான் சேகர். அவர்கள், மாதம் 1,500/- ரூபாய் என்று சொல்ல, இவனும் கணக்காளர் பதவிக்கு ஒப்புக்கொண்டான்.

“ தங்குறதுக்கு இடம், சாப்பாடு எல்லாம் நாங்களே குடுத்துடறோம் ” என்று சொன்னதும் இவை அனைத்திற்கும் சம்பளத்தில் பிடித்துக்கொள்வார்கள் என்பது அப்போது புரியவில்லை சேகருக்கு.

கூடு போன்ற ஒரு வீட்டிலிருந்து கிளம்பி அலுவலகத்திற்கு வந்து வேலை செய்வது அவனுக்கு சில நாட்களிலேயே அலுத்துப்போய் விட்டது.

குடிநீர் வாரியத்தின் புண்ணியத்தால் சொட்டு சொட்டாக வரும் தண்ணீரில் குளிக்கும்போதுதான், கிராமத்தில் பம்புசெட்டில் குளித்தது சேகருக்கு ஆனந்தமாகத் தோன்றியது.

ஹோட்டல்களிலிருந்து வரும் சாப்பாட்டை சாப்பிட்ட பின்புதான், அம்மா ஊட்டிய பிடி சோற்றின் மகத்துவம் புரிந்தது சேகருக்கு.

இயற்கையைக் கூட ரசிக்க நேரமில்லாமல், இயந்திரம் போல வாழும் சென்னைவாசிகளைப் பார்க்கும்போதுதான் சேகருக்கு, கிராமத்தில் ‘கீச்... கீச்...‘ என்று கத்தும் காதல் பறவைகளுடன் விளையாடியதும், வயக்காட்டில் நண்டு பிடித்ததும், வானவில்லை ஒரு ஓரமாய் நின்று ரசித்துக்கொண்டே இருந்ததும் நினைவிற்கு வந்தன்.

இப்போது அவனுக்கு, அவன் கிராமம் சொர்க்கமாகவே தெரிகிறது.

ஒண்ணாந்தேதி வந்தது. முதல் மாத சம்பளம் வாங்கும் நாள். அவனது செலவுகள் போக சேகரின் கையில் வெறும் 300/- ரூபாய் மட்டுமே கொடுத்தார்கள். அத்துடன், அந்த அலுவலகம் இருந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுவிட்டு தனது பெட்டியுடன், ” விவசாயம் செய்தாலும் பரவாயில்லை; எந்தத் தொழிலும் கேவலம் இல்லை ” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டபடி, அவனது குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து வாழ அவனது சொந்த கிராமத்திற்கே செல்ல முடிவெடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இரயில் ஏறுகிறான்.

இப்போது தான் அவன் உண்மையான நிம்மதியைத்தேடிப் போகிறான்.

நினைவலைகள் - சிறுக‌தைச் சித‌ற‌ல்

சுற்றிலும் பச்சைப்பசுமையான வயல்களைக் கொண்ட அந்தப் புளியாநல்லூர் கிராமத்தின் நடுவே வந்து நின்ற பேருந்தில் இருந்நு இறங்கிய சுமதிக்கு தனக்காக அங்கு காத்துக்கொண்டிருந்த தன் அண்ணன் பாலாவை கண்டவுடன் கண் கலங்கியது.

" நீ எப்படிம்மா இருக்க ... " என்றான் பாலா.

" நா ... நா ... நல்லாயிருக்கேண்ணா ... " என்று சொல்லும்போதே சுமதியின் தொண்டையை சோகம் அடைத்தது.

" என்ன மன்னிச்சிரும்மா ... இந்தக்கேள்விய நான் ஒன்கிட்ட கேட்டிருக்கக்கூடாது " என்றான் பாலா.

" போகட்டுண்ணா ... நீ எப்படி இருக்க, அண்ணி எப்படி இருக்காங்க " --- சுமதி.

" எல்லாரும் நல்லாயிருக்கோம்மா ... " --- பாலா.

" நீ காலேலேந்து ஏதாவது சாப்டியாம்மா ... " என்றான் தொய்ந்த குரலில் பாலா.

" அரசம்பட்டியில டிஃபன் சாப்டுட்டுதாண்ணா பஸ் ஏறினேன் " --- சுமதி.

அரசம்பட்டியிலிருந்து புளியாநல்லூர் வருவதற்கு ஒன்றரை மணிநேரம் பயணம் செய்ய வேண்டும். இருவரும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள். வழியில் தென்னந்தோப்பைப் பார்த்ததும் சுமதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன.

ஒரு காலத்தில் மாந்தோப்பு, புளியந்தோப்பு, தென்னந்தோப்பு, கால்வாய், ஆறு, குளம், நீரோடை ஆகியவற்றில் இவர்களின் கால்கள் பதிந்ததால்தான் அவ்விடங்களுக்கு மதிப்பே ஏற்பட்டது.

அவ்வூரில் இவர்களின் கால்தடம் பதியாத இடமே கிடையாது என சொல்லலாம். அப்படியும் அவ்வூரில் இவர்களின் பாதம் படாத இடங்கள் எந்தக் காலத்திலோ பாவம் செய்தவை.

மாலை, பள்ளி முடிந்து வீடு வந்தவுடன் இவர்கள் இருவரும் வீட்டுப்பாடங்களை முடித்த மறுகனமே வெளியே விளையாடச் சென்று விடுவார்கள். விளையாடி முடித்து இரவுதான் வீடு திரும்புவார்கள்.

ஒரு முறை மாந்தோப்பில் இருக்கும் ஒரு மாமரத்தை சிலர் வெட்டிக்கொண்டிருக்கும்போது அதில் குடிகொண்டிருந்த இரு காதல் பறவைகளை எடுத்து அந்தக் காதல் ஜோடியைக் காப்பற்றி அப்போதே காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள் சுமதி.

வீட்டை நெருங்க நெருங்க சுமதியின் மனம் கணக்க ஆரம்பித்தது. அவள் மனதில் இனம் புரியாத சோகம் ஒன்று தாக்கியது.

வீட்டில் இருந்த பாலாவின் மனைவி மகேஸ்வரி, சுமதியை வரவேற்றாள்.

" வாம்மா ... சுமதி ... எப்படிம்மா இருக்க ... " என்றாள் மகேஸ்வரி.

" நல்லாயிருக்கேன் அண்ணி ... " என்றாள் சுமதி வாய்வார்த்தைக்காக.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பாவின் நிழலைப் புகைப்படத்தில் மாலையுடனும், அம்மாவை ஒரு மூலையில் முடங்கியபடியும் பார்த்த சுமதியின் மனது குமுற ஆரம்பித்தது.

இவற்றைப் பார்த்தவுடன் நினைவலைகள் அவள் கண் முன் ஓடத்தொடங்கியது.

ஒரு காலத்தில், " அழகான குடும்பம் ... அளவான குடும்பம் ... " என்று ஊர்மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட குடும்பம், இன்று இப்படி இருப்பதற்கு சுமதியும் ஒரு காரணம்.

வீட்டின் முற்றத்தில் அமர்ந்து எல்லோரும் ஒன்றாக பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் மற்றும் பல ஆட்டங்கள் விளையாடிய காலம் ஒரு காலம்.

திருவிழா என்று வந்துவிட்டால், ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாவை நடத்த, ஊரே களை கட்டும். அதேபோல் வீட்டில் விசெஷம் என்று வந்தால் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு விசெஷத்தில் பங்கேற்பர்.

சிறு வயதில், சுமதி சமைக்கிறேன் பேர்வழி என்று சமையற்கட்டில் அடித்த ரகளைக்குப் பரிசாக, அவள் அம்மாவிடமிருந்து செல்லமாக வாங்கிய அடியை அவளால் இன்றளவும் மறக்கமுடியாது.

சுமதி பருவத்தை எட்டியவுடன் ஊரே வந்து அவளது விசெஷத்தில் கலந்து கொண்டது.

இப்படி சந்தோஷமாக இருந்த அவர்களது குடும்பத்தின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. வாழ்வில் பௌர்ணமி மட்டுமே ஒளி வீசிக்கொண்டிருக்காது, அமாவாசையும் வரும் என்பது போல அவர்களது வாழ்க்கையிலும் இருள் பற்றத் தொடங்கியது.

சுமதிக்கு அசலூர்க்காரன் ஒருவன் மீது காதல் வர, ஒரு கால கட்டத்தில் அக்காதல் பெற்றோர்களுக்குத் தெரிய வர, சுமதிக்கு சிறைவாசம் வீட்டிலேயே ...

அதையும் மீறி சுமதி பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வர, அவர்கள் சுமதியையும், அவள் கணவனையும், வசைமாறி பொழிந்ததுடன், அவமரியாதையாகவும் பேசி தலைமுழுகி விட்டனர். இதனைத் தாங்க முடியாமல், சுமதியின் கணவர் குடும்பத்திற்குச் சென்றால், அவர்களும் இவர்களை தலைமுழுகி விட இவர்கள் சென்னைக்கு வந்து தனியாக குடியெறினர்.

சுமதி போனதற்குப் பின் நோய் வாய்ப்பட்ட அவளின் தந்தை, சில மாதங்களிலேயே இயற்கை எய்த, அந்த சோகத்திலேயே அவளது அம்மாவிற்கு பித்து பிடித்துவிட்டது.

தந்தையின் ஈமைச்சடங்குகளுக்கூட சுமதியை அனுப்பவில்லை அவளது கணவன். சுமதிக்கு ஒரே துணையாக இருந்த அவளது கணவனும் விபத்து ஒன்றில் உயிரிழந்து விட, தனி மரமானாள் சுமதி. அவள் சோகத்திற்கு அளவே கிடையாது.

இந்த நினைவுகள், ஒரு கனவு போல அவள் மனத்திரையில் ஓடி முடிந்தது.

சுமதியின் கணவன் இறந்தவுடன், அவள் அண்ணன் பாலா, இங்கு வரச்சொல்லி கடிதம் போட்டு வற்புறுத்த பல மாதங்களுக்குப் பின் இங்கு வந்திருக்கிறாள் சுமதி.

" அம்மா ... என்ன மன்னிச்சிரும்மா ... " என்று கதறி அழுகிறாள் சுமதி, தன் அம்மாவிடம்.

சுமதியின் முகத்தைக்கூடப் பார்க்காமல் தலையைக் குனிந்தபடியே அவளது அம்மா, " என் புருஷன் போயிட்டாரு ... என் புருஷன் போயிட்டாரு ... " என்று சொல்லியபடியே கைகளில் உள்ள கணவரின் புகைப்படத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.

" என்னம்மா ... இன்னும் சின்னக்கொழந்த மாதிரி அழற ... " --- பாலா.

" போய்க்குளிச்சிட்டு வாம்மா ... சாப்புடலாம் ... " என்றாள் அண்ணி.

சுமதி குளித்துவிட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் பாலாவும், அவன் மனைவியும், சுமதியை தனியே கூப்பிட்டனர்.

" சுமதி ... இன்னும் எத்தனை நாளும்மா இப்படியே இருக்கப்போற ... நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு குடியும் குடித்தனமுமா இருக்கறத நான் பாக்கனும்மா ... " --- பாலா.

" என்ன மன்னிச்சிருண்ணா ... என் புருஷனோட கனவலைகள்ளயும், நம்ம அப்பா அம்மாவோட நினைவலைகள்ளயும் வாழ்ந்தே என் காலத்த தள்ளிடறேண்ணா ... தயவு செஞ்சு என்ன வற்புறுத்தாத ... என் உயிர் போனா அது இந்த வீட்டுலதான் போகனுண்ணா ... " என்று கண் கலங்க பாலாவின் தோள்களில் சாய்கிறாள் சுமதி.